பால்குடம், முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம்
பால்குடம், முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம்சென்றனர்.
முதுகுளத்தூர் அருகே உள்ள கீழக்கன்னிச்சேரி கிராமத்தில் ஆதிகாளியம்மன், கருப்பணசாமி கோவில் வருட அபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள், கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, புனித மண் எடுத்தல், பூர்ணாகுதி, கோ பூஜை நடைபெற்றன. இரண்டாம் கால யாகசாலை பூஜையாக மங்கல இசை, லட்சுமி பூஜை, மஹாபூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. யாக சாலையில் இருந்து புனித திருக்குடங்கள் கொண்டு செல்லப்பட்டு ஆதி காளியம்மன், கருப்பசாமிக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் விவசாயம் செழிக்க வேண்டியும், பருவ மழை பெய்ய வேண்டியும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்தும், முளைப்பாரியை தலையில் சுமந்தும் முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக வந்து ஆதி காளியம்மன் கோவிலை வந்தடைந்தனர். இக்கோவில் முன்பு உள்ள சூலாயுதத்திற்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது, இதில் முதுகுளத்தூர் கமுதி, அபிராமம், பரமக்குடி உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.