2.20 லட்சம் டன் குறுவை நெல் கொள்முதல்; அரவைக்காக 1.20 லட்சம் டன் அனுப்பி வைப்பு


2.20 லட்சம் டன் குறுவை நெல் கொள்முதல்; அரவைக்காக 1.20 லட்சம் டன் அனுப்பி வைப்பு
x

2.20 லட்சம் டன் குறுவை நெல் கொள்முதல்; அரவைக்காக 1.20 லட்சம் டன் அனுப்பி வைப்பு

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு குறுவை நெல் 2 லட்சத்து 20 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் 1 லட்சத்து 20 ஆயிரம் டன்நெல் அரவைக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது.இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்படும்.

குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடிபரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிரிக்கும். அதன்படி இந்த ஆண்டு டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து மே மாதத்திலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

சாகுபடி அதிகரிப்பு

இதனால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. தற்போது குறுவை அறுவடை முடிவடையும் தருவாயில் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இன்னும் ஒருசில இடங்களில் அறுவடை பணிகள் நடைபெற வேண்டி உள்ளது.

இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் நடைபெற்று வருகின்றன. வழக்கமாக கொள்முதல் பருவம் அக்டோபர் 1-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 30-ந்தேதி வரை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் பருவம் 1 மாதம் முன்னதாக செப்டம்பர் 1-ந்தேதியே தொடங்கப்பட்டது.

391 கொள்முதல் நிலையங்கள்

அதன்படி அறுவடை நடைபெறும் இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக 391 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு கொள்முதல் நடைபெற்றது.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவத்தில் இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரம் டன் நெல் கொள்முதல்செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்டு நெல் மணிகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சேமிப்பு கிடங்குகளிலும், பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டுவருகின்றன.

1.20 லட்சம் அரவைக்கு அனுப்பி வைப்பு

அதன்படி தஞ்சையில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், விருதுநகர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விழுப்புரம், திருவள்ளூர், சென்னை, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.

நெல் மூட்டைகள் லாரிகள் மூலமாகவும், சரக்கு ரெயில்கள் மூலமாகவும் அனுப்பப்பட்டு வருகின்றன. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் இருந்து இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரம் டன் நெல் அரவைக்காக அனுப்பப்பட்டுள்ளன. மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரிசி ஆலைகளுக்கும், நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டு அரிசியாகவும் அனுப்பப்பட்டு வருகின்றன. அதன்படி தஞ்சையில் நேற்று 42 வேகன்களில் 2 ஆயிரம் டன் நெல் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.


Related Tags :
Next Story