தூத்துக்குடி மாநகராட்சியில் மாதம் தோறும் 50 டன் இயற்கை உரம் தயாரிப்பு
தூத்துக்குடி மாநகராட்சியில் மாதம் தோறும் 50 டன் இயற்கை உரம் தயாரிக்கப்படுவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் மாதம் தோறும் 50 டன் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.
இயற்கை உரம்
தூத்துக்குடி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தினசரி சேரும் மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மாதம் சுமார் 50 டன் உயரம் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியுடன் இணைந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு, புதிய தொழில்நுட்பம் மூலம் குறுகிய நாட்களில் தரமான கம்போஸ்ட் உரம் தயாரிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த உரம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சி வழங்கும் 'முத்துரம்'- முத்துநகரின் இயற்கை உரம் என்ற வாக்கியத்துடன் முத்து வடிவிலான புதிய அடையாள சின்னம் (லோகோ) உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் வெளியீட்டு விழா மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி டீன் மா.தேரடிமணி, மண்ணியல் துறைத் தலைவர் எஸ்.சுரேஷ், மதுரை வேளாண்மை கல்லூரி மண்ணியல் மற்றும் சுற்றுச்சூழலியல் துறை இணைப் பேராசிரியர் பாக்கியத்து சாலியா ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு அடையாள சின்னத்தை வெளியிட்டார்.
50 டன் உரம்
பின்னர் மேயர் நிருபர்களிடம் கூறும் போது, தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மூலம் இந்த உரத்தின் தரம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தயாரிக்கும் உரத்தை அனைத்து பயிர்களுக்கும், செடிகளுக்கும், மரங்களுக்கும் பயன்படுத்தலாம்.
தற்போது மாதம் 50 டன் அளவுக்கு உரம் தயாரிக்கப்படுகிறது. வரும் காலத்தில் 100 டன் உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்த உரம் மக்களுக்கு இலவமாக வழங்கப்பட்டு வருகிறது. கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி தங்கள் தேவைக்கு இந்த உரத்தை கிலோ ரூ.1 விலைக்கு வாங்க ஒப்புதல் அளித்து உள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் போது இந்த உரம் இலவசமாக வழங்கப்படும். இந்த உரம் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் தனி அடையாள சின்னம் வெளியிடப்பட்டு உள்ளது என்று கூறினார்.