மக்கும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பு


மக்கும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பு
x

கொடைக்கானலில் மக்கும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரித்து நகராட்சி நிர்வாகம் அசத்தியுள்ளது.

திண்டுக்கல்

மக்கும் குப்பைகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு தினமும் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கொடைக்கானல் நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு வார்டு பகுதிகளில் இருந்தும் தினமும் டன் கணக்கில் குப்பைகள் வெளியேற்றப்படுகிறது. இந்த குப்பைகளை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சேகரித்து, அவற்றை பிரகாசபுரம் பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டுகின்றனர். அங்கு மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்படுகிறது. இதில் மக்காத பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை மொத்தமாக சேகரித்து, அவை லாரிகள் மூலம் அரியலூரில் உள்ள சிமெண்டு ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மேலும் மக்கும் குப்பைகள், கொடைக்கானல் நகராட்சி சார்பில் இருதயபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள உர ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மக்கக்கூடிய குப்பைகளான உணவு, காய்கறிகள், பழ வகைகள், இறைச்சி வகைகள் உள்ளிட்டவை எந்திரங்கள் மூலம் அரைக்கப்படுகிறது. பின்னர் அவை உரமாக பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மின்சாரம் தயாரிப்பு

இதற்கிடையே மக்கும் குப்பைகளை எந்திரத்தில் அரைப்பதற்கு, 1 கிலோ குப்பைக்கு 1 லிட்டர் தண்ணீர் உபயோகிக்கப்படுகிறது. அதன்படி, அரைக்கப்படும் குப்பைகள் ராட்சத தொட்டியில் சேமிக்கப்படுவதால் அதில் இருந்து மீத்தேன், சல்பர், கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுக்கள் வெளியேறுகிறது. இதன்மூலம் மின்சாரம் தயாரிக்கலாம் என்று நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மக்கும் குப்பைகள் மூலம் தினமும் 100 முதல் 150 யூனிட் வரை மின்சாரம் தயாரித்து கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் அசத்தியுள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் நாராயணன் கூறியதாவது:-

நகராட்சி குப்பைக்கிடங்கில் மக்கும் குப்பைகளை எந்திரம் மூலம் அரைத்தவுடன், அது நீர் மற்றும் திரவ உரமாக வெளியேறுகிறது. இந்த திரவ நீரை இயற்கை உரமாக விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். அதேபோல் குப்பைகளை அரைத்தவுடன் வெளியேறும் வாயுக்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதற்காக குப்பைகளை அரைக்கும் எந்திரங்கள் அருகில், மின்சாரம் தயாரிக்கும் சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளன. குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் மூலம் 50 வாட்ஸ் பல்புகளை 10 மணி நேரம் எரிய வைக்கமுடியும். அதேபோல் இந்த மின்சாரம் மூலம் மக்கும் குப்பைகளை அரைக்கும் எந்திரத்தையும் இயக்கமுடியும். திண்டுக்கல் மாவட்டத்திலேயே கொடைக்கானலில் தான் முதல் முறையாக மக்கும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story