பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவு: முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்
பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் சென்னை நுங்கம்பாக்கம் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் ரூ.85 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நூற்றாண்டு நினைவு வளைவு மற்றும் வளாக பெயர் பலகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
சென்னை,
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான தி.மு.க. முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்று வருகிறது.
அவரது நினைவை போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளி கல்வித்துறை செயல்படும் டி.பி.ஐ. வளாகத்தில் அன்பழகனின் உருவச்சிலை நிறுவப்படுவதுடன் அந்த வளாகம் 'பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்' என அழைக்கப்படும் என்றும், இந்த வளாகத்தின் நுழைவு வாயிலில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும் என்றும் கடந்த 30.11.2022 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்
அதன்படி மிக பிரமாண்டமான நூற்றாண்டு நினைவு வளைவு மற்றும் கல்வி வளாக பெயர் பலகை ஆகியவை ரூ.85 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நினைவு வளைவு மற்றும் கல்வி வளாக பெயர் பலகை ஆகியவற்றின் திறப்பு விழா டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று நடந்தது.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு டி.பி.ஐ. வளாகத்திற்கு 'பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்' என பெயர் சூட்டி, பெயர் பலகையை 'ரிமோட் கண்ட்ரோல்' மூலம் திறந்துவைத்தார்.
மரக்கன்று நட்டார்
மேலும், டி.பி.ஐ. வளாகத்தின் நுழைவு வாயில் எண் 2-ல் கட்டப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவையும் அவர் திறந்துவைத்தார்.
இதன்பின்பு அன்பழகனின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், பள்ளி கல்வித்துறை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
மேலும் விழாவில் கலந்து கொண்ட அன்பழகன் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார். பின்னர் அவர்கள் அனைவரையும் அழைத்து நினைவு வளைவின் முகப்பில் நின்று மு.க.ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
விழாவில் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, ஐ.பெரியசாமி, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ்பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள், பேராசிரியர் க.அன்பழகனின் பேரன் வெற்றியழகன் எம்.எல்.ஏ. மற்றும் அன்பழகன் குடும்பத்தினர், தலைமைச்செயலாளர் இறையன்பு, அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.