மூலிகை செடிகள் தொகுப்பு வழங்கும் திட்டம்
சாணார்பட்டி பகுதியில் தோட்டக்கலைத்துறை சார்பில் மூலிகை செடிகள் தொகுப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
சாணார்பட்டி வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் அலெக்ஸ் ஐசக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தோட்டக்கலைத்துறை சார்பில் மூலிகை செடிகள் தொகுப்பு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வீடுகளில் வளர்க்க 10 வகையான மூலிகைச் செடிகளின் தொகுப்பாக பெரியநங்கை, கற்பூரவல்லி, கற்றாழை, தூதுவளை, துளசி, பிரண்டை, திப்பிலி, புதினா, கறிவேப்பிலை, வெட்டிவேர் ஆகிய செடிகளின் கன்றுகள் வழங்கப்படுகிறது. அதனுடன் செடி வளர்க்கும் பைகள், 2 கிலோ தேங்காய்நார் கட்டிகள், மண்புழு உரம், தொழில்நுட்ப கையேடு அடங்கிய தொகுப்பும் 50 சதவீதம் மானியத்தில் ரூ.750-க்கு வழங்கப்படுகிறது. மேற்கண்ட மூலிகை செடிகளை வீட்டில் வளர்க்கும் பொழுது சளி, இருமல் உள்ளிட்ட உடல் உபாதைகளை எளிதில் சரி செய்து கொள்ளலாம். மூலிகை செடிகள் தொகுப்பு தேவைப்படுவோர் சாணார்பட்டி வட்டார தோட்டக்கலை மையத்தை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.