மதுவிலக்கை வலியுறுத்தி மாநில அளவில் போராட்டம் -மதுரையில் தொல்.திருமாவளவன் அறிவிப்பு


மதுவிலக்கை வலியுறுத்தி மாநில அளவில் போராட்டம்  -மதுரையில் தொல்.திருமாவளவன் அறிவிப்பு
x

மதுவிலக்கை வலியுறுத்தி மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் என மதுரையில் தொல்.திருமாவளவன் அறிவித்தார்.

மதுரை


மதுவிலக்கை வலியுறுத்தி மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் என மதுரையில் தொல்.திருமாவளவன் அறிவித்தார்.

நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு

மதுரை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது. பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அந்த திறப்பு விழாவை காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளன. இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர். அரசியலமைப்புச் சட்டப்படி அவர்தான் நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் தலைவர். அத்தகைய அதிகாரம் வாய்ந்த பொறுப்பை கொச்சைப்படுத்தும் வகையில் குடியரசு தலைவரையும், குடியரசு துணைத் தலைவரையும் புறக்கணித்துவிட்டு திறப்பு விழாவை நடத்துகிறார்கள்.

மக்களவை பேரவை தலைவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ஆனால் மாநிலங்களவை சபாநாயகராக உள்ள இந்திய குடியரசு துணைத் தலைவரை புறக்கணித்துள்ளனர். அவரை அழைத்தால் குடியரசு தலைவரை ஏன் அழைக்கவில்லை என்ற கேள்வி எழும் என்பதால் குடியரசு தலைவரையும் புறக்கணித்து இருக்கிறார்கள். இதை கண்டிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மே 28-ந்தேதி துக்க நாளாக கடைபிடிப்பது என முடிவெடுத்துள்ளோம். மேலும் அன்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து, கருப்பு கொடியேற்றி கண்டனத்தை பதிவு செய்ய இருக்கிறோம்.

மே 28-ந்தேதி ஏன்?

நாடாளுமன்ற திறப்பு விழாவை, சாவர்க்கரின் பிறந்த நாளான மே 28-ந்தேதி நடத்த தேர்வு செய்து இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. இது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. மே 28-ந்தேதி தேர்ந்தெடுத்தது ஏன் என்பதற்கான காரணங்களை விளக்கி கூறினால், பரிசீலனை செய்து, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.

நாடாளுமன்றத்தில், நிறுவப்பட இருக்கும் செங்கோலில் நந்தி சிலை இருப்பதாக சொல்கிறார்கள். பா.ஜனதா மதசார்புள்ளவர்களாக பேசுகிறார்கள். அதனால்தான் அவர்களை எதிர்க்கிறோம்.

மது விலக்கு போராட்டம்

மது விலக்கு தான் எங்களின் நிலைப்பாடு. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூட மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் என்று கூறி இருக்கிறார்கள். வருகிற ஜூன் 2-ம் வாரத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் அறப்போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மதுவிலக்கை தேசிய கொள்கையாகவே நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு இதற்கு உடன்பட வேண்டும். கள்ளச்சாராயத்தையும் கட்டுப்படுத்த வேண்டும்.

மதுவிலக்கு அமல்படுத்த, முதற்கட்டமாக மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், மாவட்டம் தோறும் உளவியல் தொடர்பான ஆலோசனை மையங்கள் நிறுவ வேண்டும். கள்ள வணிகத்தில் ஈடுபடக்கூடிய மாபியா கும்பல்களை கண்டறிந்து சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

கர்நாடக தேர்தல்

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி, நாடாளுமன்ற தேர்தலிலும் கட்டாயமாக பிரதிபலிக்கும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை ஆட்சி பீடத்தில் இருந்து மக்கள் தூக்கி எறிவார்கள்.

மதுவிலக்கு கொள்கையில், அ.தி.மு.க.விற்கு உண்மையிலேயே ஈடுபாடு இருந்தால், மதுவிலக்கை நடைமுறைப்படுத்தச் சொல்லி அ.தி.மு.க. போராட்டத்தை அறிவிக்குமா? என்பது என்னுடைய கேள்வி. அப்படி அறிவித்தால் நிச்சயமாக அவர்களோடு சேர்ந்து போராடுவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. தேர்தல் கூட்டணி என்பது வேறு, மக்கள் நலன் சார்ந்த போராட்டக்களம் என்பது வேறு.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story