திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை


திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை
x

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.

மதுரை

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.

கோவிலுக்குள் செல்போன் பயன்பாடு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அர்ச்சகர் சீதாராமன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். கோவில் சிலைகள் பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களினால் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டு உள்ளது.

ஆனால் திருச்செந்தூர் கோவிலுக்குள் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், சுவாமிக்கு நடக்கும் அபிஷேகம், பூஜை, தீபாராதனைகளைகூட தங்களது செல்போன்களில் பதிவு செய்கின்றனர். அங்குள்ள சிலைகளையும் படம் எடுக்கின்றனர்.

இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலன் இல்லை. எனவே, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

சுற்றுலாத்தலம் கிடையாது

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், கோவிலுக்குள் நடக்கும் பூஜைகளை அர்ச்சகர்களே வீடியோ எடுத்து தனிப்பட்ட யூடியூப் சேனலில் பதிவிடுகின்றனர். இது ஏற்கத்தக்கதல்ல. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் யாரும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. இது மாற்றப்பட வேண்டும். திருப்பதி கோவிலின் வாசலை கூட படம் எடுக்க முடியாது. தமிழ்நாட்டில் சாமி சிலைகள் முன்னால் நின்று செல்பி எடுத்துக்கொள்ளும் அளவுக்கு சுதந்திரம் அளிக்கிறார்கள். கோவில்கள் சுற்றுலா தலங்கள் கிடையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதேபோல கோவில்களுக்கு வருபவர்கள் நாகரிகமான உடைகள் அணியாமல் டி-ஷர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெகின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதையும் ஏற்க முடியவில்லை" என்றும் அதிருப்தி தெரிவித்தனர்.

செல்போனுக்கு தடை

பின்னர் நீதிபதிகள், "திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அறநிலையத்துறையானது, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அதன் நகலை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று அறநிலையத்துறை கமிஷனருக்கு அறிவுறுத்தினர்.

இந்த வழக்கு குறித்து அறநிலையத்துறை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படியும் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


Related Tags :
Next Story