கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்
வேளாங்கண்ணியில் கடல் நீைர குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
வேளாங்கண்ணியில் கடல் நீைர குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
திட்டக்குழு கூட்டம்
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் திட்டக்குழு கூட்டம் நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட திட்டக்குழு தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங் முன்னிலை வகித்தார். இதில் திட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர்.
இதன் விவரம் வருமாறு:-
மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அண்ணாதுரை: நாகை நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 25 குதிரை திறன் கொண்ட தண்ணீர் இறைக்கும் எந்திரம் வழங்க வேண்டும். நகராட்சி 36-வது வார்டில் ெரயில்வே சுரங்க பாதை அமைத்து தர வேண்டும். வேளாங்கண்ணி பேராலயத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதே நேரத்தில் அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். எனவே வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சியில் சிறப்பு கவனம் செலுத்தி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
டாக்டர்கள் பற்றாக்குறை
நகராட்சி அலுவலர்: நாகை நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்து வந்த மின்மோட்டார்கள் பழுது அடைந்துள்ளது. எனவே கூடுதலாக வைத்துள்ள மின்மோட்டார்களை வைத்து குடிநீர் இறைத்து வினியோகம் செய்யப்படுகிறது. விரைவில் குடிநீர் தட்டுப்பாடு போக்கப்படும்.
மாவட்ட கவுன்சிலர் கவுசல்யா: திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. அங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. எனவே அதை சரி செய்ய வேண்டும்.
கூடுதல் கலெக்டர்: நாகை மாவட்டத்திற்கு டாக்டர் பணி நியமனம் செய்யப்பட்டால் வர மறுக்கிறார்கள். அப்படியே பணி நியமனம் பெற்று வந்தாலும் சில மாத காலங்களில் பணி மாறுதல் பெற்று வேறு மாவட்டத்திற்கு சென்று விடுகிறார்கள். இதனால் டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதுகுறித்து கலெக்டரிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகளுக்கு போதுமான பயிற்சி
மாவட்ட கவுன்சிலர் சோழன்: வேதாரண்யம் பகுதி மானாவாரி பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். வேதாரண்யம் பகுதியில் காய்கறி விற்பனை சந்தை அமைக்க வேண்டும். மானாவாரி பகுதியில் விளையும் மூலிகை பயிர்களை தேர்வு செய்து விவசாயிகளுக்கு போதுமான பயிற்சி தர வேண்டும். மீன், இறால், கருவாடு போன்ற கடல் சார்ந்த பொருட்களை மதிப்பு கூட்டி அதை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.