பழனி முருகன் கோவிலுக்கு ரூ.200 கோடியில் திட்ட பணிகள்
பழனி முருகன் கோவிலை திருப்பதிக்கு இணையாக மாற்ற ரூ.200 கோடியில் திட்ட பணிகள் செயல்படுத்த உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சித்த மருத்துவமனை திறப்பு
பழனி முருகன் கோவில் சார்பில், ஆர்.எப். சாலையில் உள்ள வேலன்விடுதி வளாகத்தில் 27 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்தமருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். அதையடுத்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பழனி முருகன் கோவிலில் கடந்த 2019-ம் ஆண்டு பாலாலய பூஜையுடன் கும்பாபிஷேக பணிகள் தொடங்கியது. சில காரணங்களால் பணிகள் தொய்வு அடைந்தது. இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அவர் உத்தரவின்பேரில் நான் உள்பட அறநிலையத்துறை அதிகாரிகள் தொடர் ஆய்வு செய்தோம்.
அதைத்தொடர்ந்து பழனி முருகன் கோவிலில் அடுத்த மாதம் 27-ந்தேதி (ஜனவரி) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதில் ரூ.16 கோடியில் அலங்கார பணிகளும், ரூ.5 கோடியில் தங்கம், வெள்ளியால் ஆன பணிகளும் நடைபெறுகிறது. ஒட்டுமொத்த 88 பணிகளில் கோவில் சார்பில் 26 பணிகளும், உபயதார்கள் நிதி மூலம் 62 பணிகளும் நடைபெறுகிறது. இந்த பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடந்த பின்பு கோவில் மிகவும் ரம்மியமான சூழல் பெறும்.
ரூ.200 கோடியில் பெருந்திட்டம்
மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பழனி முருகன் கோவிலுக்கு ரூ.200 கோடியில் பெருந்திட்ட வரைவு ஒன்று ஏற்படுத்தியுள்ளார். இதில், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மட்டுமல்லாது அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும் ஆக்கிரமிப்பு கடைக்காரர்களுக்கு மாற்று ஏற்பாடும் செய்யப்படும்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் பணி தொடங்கப்படும். ஏனெனில் பழனிக்கு, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக ஆண்டுக்கு சராசரியாக 1 கோடியே 20 லட்சம் பக்தர்கள் வருகின்றனர். எனவே இந்த திட்ட பணிகளை அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் அறங்காவலர் குழுவினர் மேற்பார்வையில் நடைபெறும்.
செல்போன் கட்டுப்பாடு
மேலும் கும்பாபிஷேகத்தையொட்டி ஒருவார கால இடைவெளியில் பாலாலயம் செய்யப்பட்டு மூலவருக்கு மருந்து சாத்துதல் செய்வது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக எதிர்மறையான கருத்துகள் வருகிறது. ஆனால் கோவில் அர்ச்சகர்களுடன் கலந்து ஆலோசித்துதான் கும்பாபிஷேக திருப்பணிகள் நடக்கிறது. ஆகமத்துக்கு மாறாக பணிகள் நடக்கவில்லை. பழனி ரோப்கார் நிலையத்தில் நிரந்த பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் கோவிலில் செல்போன் கட்டுப்பாடு பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து 48 முதல்நிலை கோவில்களில் செல்போன் கட்டுப்பாடு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில் யானைகளுக்கு இந்த ஆண்டும் புத்துணர்வு முகாம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.