ரூ.48.80 லட்சத்தில் திட்டப்பணிகள்; கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
தென்காசி அருகே ரூ.48.80 லட்சத்தில் திட்டப்பணிகளுக்கு கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி 13-வது வார்டு பகுதியில் ரூ.8.10 லட்சம் மதிப்பில் நியாய விலை கடை, அண்ணா கலையரங்கம் அருகில் வரையறுக்கப்பட்ட நிதியில் ரூ.11.50 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம், பொதுப்பணித்துறை அலுவலகம் அருகில் ரூ.6.50 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை ஆகியன அமைக்கப்பட உள்ளது.
இதேபோன்று சாம்பவர் வடகரை தேரடி பிள்ளையார் கோவில் தெருவில் ரூ.8.10 லட்சம் மதிப்பில் நியாய விலை கடை, ரூ.8.10 லட்சம் மதிப்பில் நூலக கட்டிடம், போலீஸ் நிலையம் அருகே ரூ.6.50 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட உள்ளது. ஆக மொத்தம் ஆய்க்குடி மற்றும் சாம்பவர் வடகரை பகுதிகளில் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.48.80 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. இவற்றிற்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் மாணிக்கராஜ், காயத்ரி, அ.தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அச்சன்புதூர் பேரூராட்சி பகுதியில் உள்ள இசக்கியம்மன் கோவிலுக்கு அ.தி.மு.க. சார்பில் கட்டப்பட்ட சுற்றுச்சுவரை, தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் பொய்கை மாரியப்பன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், கோவில் அறக்கட்டளைதாரர்கள், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.