தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றும்


தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றும்
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றும் என கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றும் என கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று மாலை கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வெறுப்பு அரசியல்

டிசம்பர் 6-ந் தேதி புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாள் மற்றும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள். இந்த நாளில் அம்பேத்கருக்கு வீர வணக்கம் செலுத்துவதோடு, சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில் அனைத்து கட்சி தலைவர்களும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வேண்டும். தமிழ் மண்ணில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலுக்கு எதிராக இடம் கொடுக்ககூடாது.

வருகிற 9-ந் தேதி மதுரை பெருங்குடியில் விமானம் நிலையம் செல்லும் நுழைவுவாயிலின் முன்பு அம்பேத்கர் சிலை வெண்கல சிலையாக புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. அந்த சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

கவர்னரை திரும்ப பெற வேண்டும்

மக்களவையில் வருகிற 6-ந் தேதி கூடும் குளிர்கால கூட்டத்தொடரில், தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேச இருக்கிறோம். குறிப்பாக நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடைசெய்யக்கூடிய சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

கவர்னர் இங்கு தமிழக அரசிற்கு எதிராக ஒரு அரசியலை செய்து கொண்டிருக்கிறார். அவரை தமிழகத்தில் இருந்து திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கட்டுப்படுத்த வேண்டும். ஆணவ கொலைகளை கட்டுப்படுத்த வேண்டும். ஆணவ கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும். மேலும், மாநிலம் விட்டு மாநிலம் குடிபெயர்பவர்களுக்கு அவரவர் மாநிலத்தில் மட்டுமே வாக்குரிமை அளிப்பது குறித்து அரசு சிந்திக்க வேண்டும்.

தேர்தல் வாக்குறுதிகள்

மேலும், தி.மு.க. அரசு மக்களுக்கான அரசு. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என நம்புகிறேன். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 கிராமங்களில் தலித் மக்களுக்கு என கொடுக்கப்பட்ட காலிமனை பட்டாக்களில் குடியேற முடியவில்லை. கோர்ட்டில் வழக்கு போட்டு காலம் கடத்தி வருகின்றனர்.

குஜராத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கையும் தொடங்க இருக்கிறார்கள். பிரசாரம் நேற்றோடு முடிந்துவிட்டது. ஆனால் இன்றைக்கு தனது தாயை பார்க்க போவதாக சாக்கு சொல்லி பிரதமர் மோடி, குஜராத்திற்கு சென்றுள்ளார். இது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போதே தாயை பார்த்திருக்கலாம். அல்லது வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு சந்தித்திருக்கலாம்.

நாளை 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. திட்டமிட்ட முன்னோக்கத்தோடு பிரதமர் குஜராத்திற்கு சென்றுள்ளார் என கருதுகிறோம். இது கடுமையான கண்டனத்திற்குரியதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மாதேஸ், ஆலப்பட்டி ரமேஷ் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.


Next Story