அரசு மருத்துவ கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கு அடுத்த மாதம் 4-ந் தேதி பதவி உயர்வு கலந்தாய்வு
உதவி பேராசிரியர்களுக்கு அடுத்த மாதம் 4-ந் தேதி பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியில் உலக வெண்புள்ளிகள் தினத்தையொட்டி, இந்திய வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் 'சேர்ந்து வரைவோம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதியேற்பு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். இதில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பரஞ்சோதி, வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்க நிர்வாகி கே.உமாபதி, பேராசிரியர் டி.இ.திருவேங்கடம், அன்னை வேளாங்கன்னி கல்வி குழுமத்தின் நிறுவனத் தலைவர் எஸ்.தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர், .
அதனைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாரபட்சம் கூடாது
தமிழ்நாட்டில் 37 லட்சம் பேர் வெண்புள்ளிகளினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். பொதுவாக குஷ்டம் என்று சொன்னால் தொழுநோய் என்று பொருள். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2030-ம் ஆண்டுக்குள் தொழுநோய் இல்லாத தமிழகம் என்ற நிலையை உருவாக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு வலியுறுத்தி வருகிறார். அந்தவகையில் தமிழ்நாட்டில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட 4 ஆயிரம் பேருக்கு ரூ.2,000 உதவித்தொகையும், காலணிகள் மற்றும் கையுறைகளை ஆண்டுதோறும் தந்து, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
தொழுநோய்க்கும், வெண்புள்ளிக்கும் சிறிதும் தொடர்பில்லாதபோது, அவர்களை அலட்சியப்படுத்துவது, பாரபட்சமாக நடத்துவதும் கூடாது என்ற வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஜூலை 4-ந் தேதி கலந்தாய்வு
தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பதவியில் இருந்து இணை பேராசிரியராக 423 பேருக்கு பதவி உயர்வு தரப்பட வேண்டும். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருந்தது. அந்த வழக்கை முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலை பெற்று துரிதப்படுத்தினோம். தமிழ்நாடு அரசு இவர்களுக்கு பதவி உயர்வு தருவதற்கு கலந்தாய்வு நடத்திக்கொள்ளலாம் என்ற வகையில் ஜூலை 6-ந் தேதி தீர்ப்பு தர இருக்கிறார்கள். இவர்களுக்கு பதவி உயர்வே இல்லை, மருத்துவ கல்லூரிகள் எல்லாம் மூடும் நிலைக்கு வந்துவிட்டது என்றெல்லாம் சொல்வது மிகவும் தவறான செய்தியாகும்.
எனவே இந்த உதவி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 4-ந் தேதியே தொடங்க இருக்கிறோம். உதவி பேராசிரியர்கள் அனைவரும் கலந்தாய்வில் கலந்து கொண்டு இணை பேராசிரியராக பொறுப்பேற்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.