புகார் மீது விசாரிக்காமல் வழக்குப்பதிவதா? சிதம்பரம் போலீசாரை கண்டித்து முஸ்லிம்கள் போராட்டம்
புகார் மீது விசாரிக்காமல் வழக்குப்பதிந்த சிதம்பரம் போலீசாரை கண்டித்து முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் ஜவகர் தெருவை சேர்ந்தவர் ஷகிப் மகன் சாகுல் ஹமீது(வயது 39). இவர், சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அந்த புகாரில், நான் சிதம்பரம் லப்பை தெரு பள்ளிவாசலில் உறுப்பினராக இருந்து வருகிறேன். சிதம்பரத்தில் உள்ள 5 பள்ளி வாசல்களும் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் செல்லப்பா என்கிற முகமது ஜியாவுதீன், ஜாகீர் உசேன், சலீம் ஆகியோர் சிதம்பரத்தில் உள்ள ஈக்தா மைதானத்தில் இடம் வாங்கி ஒரே இடத்தில் தொழுகை செய்வதற்காக, முடிவு செய்து உள்ளூர் மற்றும் வெளியூர் உறுப்பினர்களிடம் ரூ.40 லட்சம் வசூல் செய்துள்ளனர். ஆனால் அந்த பணத்தை முறையாக வங்கி கணக்கில் செலுத்தவில்லை. இதுகுறித்து நிர்வாகத்திடம் கேட்டால், அவர்கள் என்னை அடித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து ஜியாவுதீன், ஜாகீர் உசேன், சலீம் ஆகிய 3 பேர் மீது சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் முகமது ஜியாவுதீன் தலைமையில், ஜாகிர் உசேன், சலீம், நகர மன்ற உறுப்பினர் மக்கின், இஸ்லாமிய அமைப்பினர் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்த நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் எந்தவொரு விசாரணை செய்யாமல் போலீசார் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்க செயல். எனவே எங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து வழக்கை ரத்து செய்வதாக போலீஸ் இன்ஸ்பெக்டா் ஆறுமுகம் தெரிவித்தார். இதையேற்ற இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பும் ஏற்பட்டது.
கைது செய்ய வேண்டும்
இந்த நிலையில் நகர ஜமாத் தலைவர் ஜாபர் அலி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சிதம்பரம் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஈக்தா மைதானத்தில் இடம் வாங்க ஜியாவுதீன், ஜாகிர் உசேன், சலீம் ஆகியோர் பணம் கையாடல் செய்ததற்கு எங்களிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளது. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையேற்ற அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.