தங்கும் விடுதியில் இளம்பெண்களை வைத்து விபசாரம்-மேலாளர் கைது; உரிமையாளருக்கு வலைவீச்சு
வேலூர் அருகே தங்கும் விடுதியில் பெண்களை வைத்து விபசாரம் நடத்திய மேலாளர் கைது செய்யப்பட்டார். விடுதி உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர்
வேலூர் அருகே தங்கும் விடுதியில் பெண்களை வைத்து விபசாரம் நடத்திய மேலாளர் கைது செய்யப்பட்டார். விடுதி உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
தங்கும் விடுதியில் விபசாரம்
வேலூரை அடுத்த அரியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் விபசாரம் நடப்பதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து அங்குள்ள தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு, அரியூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷாஜின் தலைமையிலான போலீசார் அரியூர், திருமலைக்கோடியில் உள்ள தங்கும் விடுதிகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
முதற்கட்டமாக போலீசார் தங்கும் விடுதிகளில் வரவேற்பு பகுதியில் பராமரிக்கப்படும் பதிவேட்டை பார்வையிட்டு, பின்னர் அங்குள்ள அறைகளில் தங்கியிருக்கும் நபர்களின் விவரம், முகவரி உள்ளிட்டவற்றை கேட்டறிந்தனர். தொடர்ந்து ஒவ்வொரு அறைகளாக சென்று போலீசார் சோதனை நடத்தினர்.
மேலாளர் கைது
அப்போது அரியூர் அருகே உள்ள தங்கும் விடுதி ஒன்றில் 2 பெண்களை வைத்து விபசாரம் செய்வது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், வேலூரை அடுத்த அத்தியூரை சேர்ந்த நாராயணன் (வயது 42) என்பவர் தங்கும் விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருவதும், அங்கு திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்கானூர் பகுதியை சேர்ந்த சபாபதி (34) மேலாளராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. நாராயணன், சபாபதி ஆகியோர் தங்கும் விடுதியில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து 2 பெண்களையும் மீட்டு போலீசார் வேலூரில் உள்ள அரசு பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து சபாபதியை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய நாராயணனை போலீசார் தேடி வருகிறார்கள்.