சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும்


சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும்
x

கோத்தகிரியில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்று லாங்வுட் சோலை பாதுகாப்பு குழு கோரிக்கை விடுத்து உள்ளது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரியில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்று லாங்வுட் சோலை பாதுகாப்பு குழு கோரிக்கை விடுத்து உள்ளது.

சதுப்பு நிலம்

கோத்தகிரி நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரைபிள் ரேஞ்ச் சதுப்பு நில பகுதி விளங்குகிறது. அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்ல அமைக்கப்பட்ட மண் சாலை, மழையின் காரணமாக பழுதடைந்து உள்ளது. கிராம நிர்வாக அலுவலரின் அனுமதி பெற்று அங்கு பொதுமக்களே கட்டிடக் கழிவுகளை பயன்படுத்தி சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக அங்கு கட்டிடக் கழிவுகள் வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டு, மலைபோல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. அரசு நிலமான பாதுகாக்கப்பட வேண்டிய சதுப்பு நிலத்தில் சாலை அமைப்பதற்காக கட்டிடக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இது சதுப்பு நிலத்தின் சூழலமைப்பையே அழித்து விடும். இதுகுறித்து லாங்வுட் சோலை பாதுகாப்பு குழுவின் செயலர் ராஜு கூறும்போது,

கட்டிடக் கழிவுகள்

சதுப்பு நிலங்களை பாதுகாக்க உயர் நீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அரசு அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இல்லாதது வருந்தத்தக்கது. சதுப்பு நிலத்தில் சாலை வசதியை அறிவியல் பூர்வமாக அரசு தான் செய்து கொடுக்க வேண்டும். கோத்தகிரி மக்களுக்கு வருங்கால குடிநீர் தேவையை வழங்கும் சதுப்பு நிலத்தை பாதுகாக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல வழிகளில் போராடி வருகின்றனர். இந்த சூழலில் கட்டிட கழிவுகளை குவித்து சதுப்பு நிலம் மாசுபடுவது சரியானது இல்லை. அப்பகுதியில் வறட்சி நிவாரண நிதி திட்டத்தால் அமைக்கப்பட்ட 4 கிணறுகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை. தற்போது பொதுமக்களே சாலை அமைத்தால் இந்த சதுப்பு நிலம் அழிந்து விடும். எனவே, சதுப்பு நிலத்தில் கட்டிட கழிவுகளை கொண்டு சாலை அமைக்கக்கூடாது. அந்த நிலத்தை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story