கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்; கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் மனு
கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் மனு கொடுத்தனா்.
ஈரோடு தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி பொதுச்செயலாளர் சிவகாமி மகேஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியிடம் இருந்து சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்தது தொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர், போலி ஆதார் ஆவணங்களை தயாரித்தவர் என 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவமனை மற்றும் டாக்டர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நாங்கள் வலியுறுத்தி இருந்தோம். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி மேற்கொண்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும் அவரின் மறுவாழ்வுக்கு உதவ தகுந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும். கருமுட்டை விற்பனை தொடர்பாக போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கருமுட்டை தான செயல்முறைக்கு என புதிய விதிமுறைகளை இயற்ற வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகளை தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறி இருந்தனர்.