வடமதுரையில் கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


வடமதுரையில் கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x

பட்டா குளறுபடியை கண்டித்து கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த சக்திவேல் மனைவி சரசு. இவர் தும்மலக்குண்டு பகுதியில் உள்ள ஒரு நிலத்தை கடந்த ஆண்டு வாங்கினார். நிலத்தை வாங்கியபோது, அதனை விற்றவரின் பெயரில் மட்டும் தனி பட்டாவாக இருந்தது. இந்தநிலையில் சரசு அந்த நிலத்திற்காக கடந்த ஏப்ரல் மாதம் கணினியில் சிட்டா எடுத்து பார்த்ததில் பட்டாவில் வேறு ஒரு நபரின் பெயரும் சேர்க்கப்பட்டு கூட்டு பட்டாவாக மாற்றப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சரசு, இதுகுறித்து வேடசந்தூர் துணை தாசில்தாருக்கு மனு அளித்தார். பின்னர் மனுவின் நிலை குறித்து தெரிந்துகொள்வதற்காக சரசுவின் கணவர் சக்திவேல் வடமதுரை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் சென்று விசாரித்தார். அப்போது மர்மநபர் ஒருவர் சக்திவேலை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டினார். இதுகுறித்து சக்திவேல் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் மேலும் 2 பேரின் பட்டாகளிலும் குளறுபடி செய்யப்பட்டு, அதே மர்மநபரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பட்டா குளறுபடியை கண்டித்து சேர்வைகாரன்பட்டி, வெள்ளபொம்மன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று வடமதுரை கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பொன்னுசாமி, நிலத்திற்கான ஆவணங்களை ஆய்வு செய்தார்.

பின்னர் நிலத்தின் உரிமையாளர்களுக்கு தனிப்பட்டா கிடைப்பதில் சிக்கல் இல்லை. ஆன்லைனில் விண்ணப்பித்தால் விரைவில் தனிப்பட்டா வழங்கப்படும் என்று கூறி சமரசம் பேசி, பொதுமக்கள் கலைந்துபோக செய்தார். இந்த சம்பவத்தால் வடமதுரையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 



Next Story