கோழி வளர்ப்பு கூலி உயர்வு கோரி கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோழி வளர்ப்பு கூலி உயர்வு கோரி கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழக கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொருளாளர் வள்ளி பாண்டியன் தலைமை தாங்கினார். குபேரன், கருப்புசாமி, ஜெயக்குமார், பாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.
மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான லதா, மாநில பொதுச்செயலாளர் குலசேகரன், மாநில செயலாளர் மணி ஆகியோர் பேசினர். கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் கோழி வளர்ப்பு கூலி உயர்வு கோரி முத்தரப்பு பேச்சுவார்த்தையை அரசு நடத்த வேண்டும்,
கறிக்கோழி வளர்ப்புக்கான கூலியை அரசே நிர்ணயம் செய்திட தொழிலாளர் நலத்துறை மூலம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு கோழிப்பண்ணைகள் அமைத்திட மானியத்துடன் கூடிய வங்கி கடன் மற்றும் பண்ணை காப்பீடு, மருத்துவ காப்பீடு திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் நிர்வாகிகள் ஏழுமலை, ரமேஷ், சிவகுரு, சுந்தர்ராஜன், பத்மநாபன், கதிர்வேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.