பள்ளியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்


பள்ளியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
x

விஷப்பூச்சி கடித்து மாணவன் உயிரிழந்த பள்ளி திறக்கப்பட்டதை கண்டித்து உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை


கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே விஷப்பூச்சி கடித்து மாணவன் உயிரிழந்த பள்ளி திறக்கப்பட்டதை கண்டித்து உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவன் சாவு

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள வலைச்சேரிபட்டியில் நான்கு வழி சாலை அருகில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பூமங்கலப்பட்டியை சேர்ந்த செந்தமிழ்செல்வன்-சுமங்கலி தம்பதியின் மகன் நிதிஷ் (வயது 13) 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த மாதம் 22-ந் தேதி பள்ளியில் இருந்த போது விஷப்பூச்சி கடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிதிஷ் கடந்த 3-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால்தான் மாணவன் உயிரிழந்ததாக கூறி மாணவரின் உறவினர்கள் புகார் அளித்து பள்ளி நிர்வாகிகளை உடனே கைது செய்யவேண்டும் என போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பள்ளி நிர்வாகிகள் மீதும் பள்ளி மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக சம்பந்தப்பட்ட பள்ளி திறக்காமல் இருந்தது.

முற்றுகை

இந்நிலையில் நேற்று காலை பள்ளி திறக்கப்பட்டதாக வந்த தகவலையடுத்து உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பள்ளியின் தாளாளர் தேன்மொழி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பள்ளியை திறக்க தற்போது அனுமதியில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மாணவரின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.




Next Story