உள்ளாட்சி பணியாளர்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் திருவாரூர் மாவட்ட பகுதிகளில் காத்திருப்பு போராட்டம்


உள்ளாட்சி பணியாளர்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் திருவாரூர் மாவட்ட பகுதிகளில் காத்திருப்பு போராட்டம்
x

உள்ளாட்சி பணியாளர்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் திருவாரூர் மாவட்ட பகுதிகளில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

உள்ளாட்சி பணியாளர்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் திருவாரூர் மாவட்ட பகுதிகளில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலுவை ஊதியம்

ஊராட்சி செயலர் உள்ளிட்ட உள்ளாட்சி பணியாளர்களுக்கு 5 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும். தாமதமின்றி ஊதியம் கிடைக்கும் வகையில் ஊராட்சி ஊதிய கணக்கில் நிதி மாற்றம் செய்வதற்கு நிரந்தர உத்தரவு வழங்க வேண்டும். ஊராட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மாநில நிதி மானியத்தை வழங்கி தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் பணிகள், ஈமச்சடங்கு உதவித்தொகை, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் தொய்வின்றி நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஊராட்சி அலுவலகங்களில் சிறப்பு திட்டத்தின் கீழ் பணி புரியும் நிரந்தர ஊழியர்களுக்கு முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும்.

காத்திருப்பு போராட்டம்

ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் அனைத்து வகை அலுவலர்களுக்கும் மாத கடைசி வேலை நாளில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் திருவாரூர் ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் வசந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில், வட்ட தலைவர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கொரடாச்சேரி

கொரடாச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு வட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வாசுதேவன், மாவட்ட இணைச்செயலாளர்கள் செல்வகணபதி, அமர்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி

மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வட்ட கிளை தலைவர் இலரா தலைமை தாங்கினார். வட்டகிளை செயலாளர் சுந்தரராஜன், வட்ட கிளை பொருளாளர் தமிழரசன், மாவட்ட துணைத்தலைவர்கள் மோகன், பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்காமல் விடுபட்டுள்ள 5 மாத ஊதியத்தை நிலுவையின்றி உடனடியாக வழங்க வேண்டும். ஊராட்சிகளுக்கு உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

திருத்துறைப்பூண்டி

இதேபோல் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்க நிர்வாகிகள் பன்னீர்செல்வம், சிவகுமார், ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோட்டூர்

கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடடனர். இதில் வட்டார தலைவர் ரவி, பொருளாளர் செல்வம், மாவட்ட இணைசெயலாளர் இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதில் சங்க வட்ட தலைவர் நேரு, மாவட்ட இணைச்செயலாளர் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story