5-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 5-ந் தேதி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 5-ந் தேதி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், முத்துச்சாமி, பாண்டி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆர்ப்பாட்டம்
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்., மத்திய அரசு வழங்கியுள்ளது போல் தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு முன் தேதியிட்டு 3 சதவீத அகவிலைப்படியை உடனடியாக அறிவிக்க வேண்டும்.
முடக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பு உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக தொடர்ந்து கருத்துக்களை கூறி வரும் நிதி அமைச்சர் மற்றும் ஆசிரியர் விரோத போக்கை கடைபிடித்து வரும் பள்ளிக்கல்வித்துறை அதிகார வர்க்கத்தை கண்டித்தும், முதல்-அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்த மாநில கூட்டத்தில் முடிவுசெய்யபட்டுள்ளது.
5-ந் தேதி
அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தின் சார்பில் வருகிற ஆகஸ்டு 5-ந் தேதி மாலை சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.