கொடைக்கானலில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்


கொடைக்கானலில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
x

கொடைக்கானலில் நில உரிமை பட்டாக்களை பத்திரப்பதிவு செய்ய கோரிக்கை விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

கொடைக்கானல் மேல்ம‌லை, கீழ்ம‌லை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு, அவர்களது நிலம் மற்றும் விவசாய நிலங்களுக்கு அரசால் பி.கே.டி. என்ற நில உரிமை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பட்டா உள்ள நில‌ங்களை விற்பதற்காக விவ‌சாயிகளும், பொதும‌க்களும் ப‌த்திர‌ப்ப‌திவு செய்ய சார்-பதிவாளர் அலுவலகம் செல்லும்போது, டி.கே.டி. ப‌ட்டாவாக‌ உள்ள‌து என‌ கூறி ப‌த்திரப்‌ப‌திவு செய்ய‌ ம‌றுப்ப‌தாக‌ கூறப்படுகிறது. அதேபோல் வ‌ருவாய்துறை அதிகாரிக‌ளும் நில‌ங்க‌ளை பிரித்து அள‌வீடு செய்வ‌த‌ற்கும், ப‌ட்டா பெய‌ர் மாற்ற‌ம் செய்யவும் ம‌றுப்ப‌தாக‌ பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலை ம‌ற்றும் ந‌க‌ர் ப‌குதியை சேர்ந்த‌ விவசாயிக‌ள், பொதும‌க்க‌ள், நில‌ உரிமை வாழ்வாதார‌ உரிமை குழுவின‌ர் என ஆயிரத்திற்கும் மேற்ப‌ட்டோர் இன்று கொடைக்கானல் மூஞ்சிக்க‌ல் ப‌குதியில் ஆர்ப்பாட்ட‌த்தில் ஈடுப‌ட்டன‌ர். அப்போது டி.கே.டி. பட்டாவை பத்திரப்பதிவு செய்து, அதனை நிபந்தனையற்ற நிரந்தர பட்டாவாக வழங்க வேண்டும். அதேபோல் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். மேலும் 1995-ம் ஆண்டு வ‌ரை கொடுக்க‌ப்ப‌ட்ட‌ டி.கே.டி. பட்டா நில‌ங்கள் மீதான‌ க‌ட்டுப்பாடுக‌ளை நீக்கி முறைப்ப‌டுத்தி அந்த நில‌ங்க‌ளுக்கு நிரந்தர பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள், பொதுமக்கள் கோஷமிட்டனர்.

இந்த விஷயத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று கொடைக்கானல் தாலுகாவில் உள்ள 16 ஊராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.Next Story