கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து, மாவட்டம் முழுவதும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து, மாவட்டம் முழுவதும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
பெரியார் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக இந்து முன்னணியின் மாநில கலை பண்பாட்டு பிரிவின் தலைவரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் நேற்று கைது செய்யப்பட்டார்.
இதனை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் இந்து முன்னணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அவர்களை, போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதற்கிடையே வெள்ளை விநாயகர் கோவில் அருகே இந்து முன்னணியை சேர்ந்த மேலும் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதில் மதுரை கோட்ட செயலாளர் சங்கர் கணேஷ், மாவட்ட செயலாளர்கள் சஞ்சீவிராஜ், மூர்த்தி, துணைத் தலைவர் வினோத் ராஜ் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
நிலக்கோட்டை, வத்தலக்குண்டு
இதேபோல் வத்தலக்குண்டுவில் பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் முத்துராமலிங்கம், வத்தலக்குண்டு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் செந்தில், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் அண்ணாதுரை உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
நிலக்கோட்டை நடராஜர் கோவில் முன்பு மதுரை கோட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்ட துணை செயலாளர் மாரிமுத்து உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழனி, வடமதுரை
பழனியில், மயில் ரவுண்டானா அருகே இந்து முன்னணி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை பழனி டவுன் போலீசார் கைது செய்தனர். சாணார்பட்டி அருகே உள்ள அதிகாரிபட்டியில் கிழக்கு மாவட்ட செயலாளர் முத்து அருள் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் வடமதுரையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அதை மீறி வடமதுரை காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக இந்து முன்னணியினர் குவிந்தனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து ஒரு வேனில் ஏற்றினர். அப்போது அங்கு வந்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சதீஷ் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் வேனை வழிமறித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் போலீசாருக்கும், இந்து முன்னணியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சதீஷ் உள்பட 64 பேரை போலீசார் கைது செய்தனர்.