டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மண்எண்ணெய் பாட்டிலுடன் பெண்கள் போராட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மண்எண்ணெய் பாட்டிலுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடை
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த மோளையானூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையை அகற்றக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் கடையை அகற்றக்கோரி ஏற்கனவே 2 முறை போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பு 50-க்கும் மேற்பட்ட பெண்கள்அங்கு திரண்டனர். திடீரென அவர்கள் கடையை அகற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் மண்எண்ணெய் பாட்டிலுடன் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
பெண்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சுப்பிரமணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை பறித்தனர். பின்னர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பெண்கள், டாஸ்மாக் கடையால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் மது அருந்துபவர்களால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. எனவே கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
வேறு இடத்துக்கு மாற்றம்
இதையடுத்து தாசில்தார் சுப்பிரமணி, உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதில் சமாதானம் அடைந்த பெண்கள், தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து சுமார் 1½ மணி நேரத்துக்கு பிறகு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன.
முன்னதாக பெண்கள் போராட்டம் காரணமாக டாஸ்மாக் கடை திறக்கப்படாததால், மதுபாட்டில்களை வாங்க வந்த மதுபிரியர்கள் 1½ மணி நேரமாக பரிதவித்தப்படி நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.