பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:
பெரியாம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் பெரியாம்பட்டி கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட நிர்வாகி மாது தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், மாவட்ட துணைத்தலைவர் ஜீவானந்தம், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட தலைவர் அன்பு, நிர்வாகிகள் முருகேசன், உதயகுமார் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ரூ.500 கோடி சுழல் நிதி
பால் கொள்முதல் விலையை 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி வழங்க வேண்டும். தினசரி பால் கொள்முதலை தற்போது உள்ள 32 லட்சத்திலிருந்து 1 கோடி லிட்டராக உயர்த்த வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய வேண்டும்.
பாலுக்கான நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு ரூ.500 கோடியை சுழல் நிதியாக ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளிக்கு முன்பாக பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.