தேவாரம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து துணைத்தலைவர், கவுன்சிலர்கள் வாயில் கருப்பு துணி கட்டி தர்ணா


தேவாரம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து துணைத்தலைவர், கவுன்சிலர்கள் வாயில் கருப்பு துணி கட்டி தர்ணா
x

தேவாரம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து துணைத்தலைவர், கவுன்சிலர்கள் வாயில் கருப்பு துணி கட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

தேவாரம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் கவுன்சிலர்களாக தி.மு.க.வை சேர்ந்த 10 பேரும், அ.தி.மு.க.வினர் 3 பேர், அ.ம.மு.க.வினர் 2 பேர், வி.சி.க. ஒருவர் மற்றும் சுயேட்சை 2 பேர் உள்ளனர். பேரூராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த லட்சுமி பால்பாண்டியன் உள்ளார். துணைத்தலைவராக சிவக்குமார் இருக்கிறார். இந்தநிலையில் பேரூராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடைபெறுவதாக பேரூராட்சி செயல் அலுவலர் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதன்படி, நேற்று காலை 11 மணிக்கு அனைத்து கவுன்சிலர்களும் பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.

இதையடுத்து கூட்டம் தலைவர் லட்சுமி பால்பாண்டியன் தலைமையில் தொடங்கியது. அப்போது துணைத்தலைவர் சிவக்குமார் எழுந்து, செயல் அலுவலர் வந்த பிறகு கூட்டத்தை நடத்துங்கள் என்று வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த தலைவர் லட்சுமி பால்பாண்டியன், செயல் அலுவலர் கலெக்டர் அலுவலக கூட்டத்துக்கு சென்றுவிட்டார் என்றார். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத துணைத்தலைவர் வெளிநடப்பு செய்தார். மேலும் அவருக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர் எழுந்துநின்று, பேரூராட்சி நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் தொடர்ந்து நடைபெறுவதாக குற்றம்சாட்டியதுடன், செயல் அலுவலர் வந்த பிறகுதான் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று ஒருமித்த கருத்தோடு வலியுறுத்தினர்.

பின்னர் துணைத்தலைவர் தலைமையில் 6 கவுன்சிலர்கள் கூட்டத்தை விட்டு வெளியேறினர். அதைத்தொடர்ந்து அலுவலக வாசலில் தரையில் அமர்ந்து, வாயில் கருப்புத்துணி கட்டி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பேரூராட்சி கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இருப்பினும் துணைத்தலைவர் மற்றும் 6 கவுன்சிலர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேவாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட துணைத்தலைவர், கவுன்சிலர்களை அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். தி.மு.க. பேரூராட்சி தலைவரை எதிர்த்து தி.மு.க கவுன்சிலர்களே போராட்டம் நடத்திய சம்பவம் தேவாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story