தொப்பூர் அருகே மேம்பாலம் கட்டி தரக்கோரி ஆற்றில் இறங்கி கிராம மக்கள் போராட்டம்


தொப்பூர் அருகே மேம்பாலம் கட்டி தரக்கோரி ஆற்றில் இறங்கி கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

தொப்பூர் அருகே மேம்பாலம் கட்டி தரக்கோரி ஆற்றில் இறங்கி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொப்பையாறு அணை நிரம்பியது

தொப்பூர் அருகே தர்மபுரி-சேலம் மாவட்ட எல்லையில் தொப்பையாறு அணை உள்ளது. சேர்வராயன் மலை தொடரில் பெய்த மழை காரணமாக இந்த அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த வாரம் இந்த அணை தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து தொப்பையாற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த உபரிநீர் தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களின் வழியாக மேட்டூர் அணையை சென்றடைகிறது. தொப்பூர் அருகே உள்ள டி.காணிகரஅள்ளி, சேலம் மாவட்டம் செக்காரப்பட்டி காட்டுவளவு இடையே தொப்பையாறு பாய்கிறது. செக்காரப்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளும், டி.காணிகரஅள்ளியை சேர்ந்தவர்களின் விவசாய நிலங்களும் உள்ளன. மேலும் மயானமும் உள்ளது.

ஆற்றை கடக்க சிரமம்

தற்போது தொப்பையாற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் டி.காணிகரஅள்ளி, செக்காரப்பட்டி காட்டுவளவு ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அதாவது பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாய வேலைக்கு செல்வோர் மற்றும் பல்வேறு பணிகளுக்காக செல்வோரும் ஆற்றை கடக்க சிரமம் அடைந்து வருகிறார்கள்.

மேலும் டி.காணிகரஅள்ளியில் மரணம் அடைவோரை செக்காரப்பட்டி காட்டுவளவு பகுதியில் உள்ள மயானத்துக்கு கொண்டு செல்ல முடியாமலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆற்றை கடக்க உயர்மட்ட மேம்பாலம் அமைக்க 2 கிராம மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அவர்கள் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

போராட்டம்

இந்தநிலையில் தொப்பையாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க கோரி 2 கிராம மக்களும், சிறுவர்-சிறுமிகளுடன் நேற்று ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஆற்றை கடக்க வசதியாக மேம்பாலம் கட்டி தரக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் பாலம் கட்ட விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்தனர். கிராம மக்களின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story