காரிமங்கலத்தில் உள்ளாட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்ட உள்ளாட்சி பணியாளர்கள் சங்கம், மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுப்ரமணி, சிதம்பரம் ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் மல்லி, குப்பம்மாள், ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் மணி, உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன்ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து உள்ளாட்சி பணியாளர்களுக்கும் கருணை தொகை வழங்க வேண்டும். கொரோனா காலங்களில் பணி செய்த உள்ளாட்சி பணியாளர்களுக்கு அரசு அறிவித்த சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் டேங்க் ஆபரேட்டர், தூய்மை பணியாளர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் சண்முகம், முருகன், நாகராஜ், கோபால், ஆறுமுகம், மாதேஷ், பழனியம்மாள், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.