உத்தமபாளையம் அருகே ரேஷன் கடையை கிராம மக்கள் முற்றுகை
உத்தமபாளையம் அருகே ரேஷன் கடையை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
உத்தமபாளையம் அருகே ஆனைமலையன்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் இன்று அரிசி வினியோகம் செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அரிசி வாங்குவதற்காக ஏராளமான கிராம மக்கள் கடை முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்தநிலையில் கடையில் கைரேகை எந்திரம் பழுது ஏற்பட்டுள்ளது என்று கூறி அரிசி வினியோகம் இல்லை என்று ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கடையை முற்றுகையிட்டனர். கடையில் அவ்வப்போது கைரேகை எந்திரம் பழுது என்று கூறி ரேஷன் பொருட்கள் முறையாக வினியோகம் செய்வதில்லை என்று அவர்கள் புகார் தெரிவித்தனர். அப்போது கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ரேஷன் கடை ஊழியர்கள், கைரேகை எந்திரம் பழுதை சரிசெய்து உடனடியாக அரிசி உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.