தர்மபுரியில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:
தர்மபுரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு பணியாளர் சங்க மாநில பிரசார செயலாளர் சுகமதி தலைமை தாங்கினார். ரேஷன் கடை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் தனசேகரன், சீனிவாசன், குணசேகரன், ஹரிதாஸ், சிவக்குமார், ஏழுமலை, லட்சுமிபதி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ரேஷன் கடைகளில் 2 தடவை ரசீது போடும் முறையை ரத்து செய்து ஒரே பதிவில் 2 குறுஞ்செய்தி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு ரசீதுக்கும் இடைப்பட்ட 5 நிமிட கால அவகாசத்தை ரத்து செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் அளவு, விலை மற்றும் கூடுதல் தொகையுடன் கூடிய ரசீது வழங்கும் வகையில் 4-ஜி விற்பனை எந்திரம், 4-ஜி சிம்கார்டுகள் வழங்க வேண்டும்.
ஊக்கத்தொகை
ரேஷன் கடைகளில் செயலி மூலம் ஆய்வு செய்வதை ரத்து செய்து விட்டு, விற்பனை முனையம் மூலம் ஆய்வு செய்யப்பட வேண்டும். சிறப்பாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ஒரு குடும்ப அட்டைக்கு தலா ரூ.10 வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ஊதியத்தில் பிடித்தம் செய்யும் நிதியை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் தனியார் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ரேஷன் படை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.