தேனியில் ஏ.ஐ.டி.யு.சி., திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனியில் ஏ.ஐ.டி.யு.சி. மற்றும் திராவிடர் கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் தேனி பங்களாமேட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவும், ஏழை-எளிய மக்கள் நலனுக்கு எதிராகவும் திட்டங்கள் இடம் பெற்று இருப்பதாக கூறியும், மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கி பேசினார். இதில், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் திராவிடர் கழகம் சார்பில் தேனி பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ரகுநாகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.க., தமிழ்ப்புலிகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சி அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.