சத்துமாவை பதுக்கி வைத்து விற்பதாக கூறி அங்கன்வாடி மையத்தை பொதுமக்கள் முற்றுகை-ஏரியூர் அருகே பரபரப்பு
ஏரியூர்:
ஏரியூர் அருகே குழந்தைகளுக்கான சத்துமாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கூறி, அங்கன்வாடி மையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அங்கன்வாடி மையம்
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள தொன்னகுட்டஅள்ளி ஊராட்சி பேகியம் புதுக்காடு பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்கு தினமும் 25 குழந்தைகள் வந்து செல்கிறார்கள். அங்கன்வாடி பணியாளராக சுகுணா, சமையலராக மகேஷ் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தநிலையில் மையத்துக்கு வரும் 5 குழந்தைகளுக்கு மட்டுமே சத்துமாவு, முட்டை மற்றும் உணவு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் உணவுகளில் காய்கறி, பருப்பு ஆகியவை சேர்க்காமல் சமைக்கப்படுவதாகவும், உணவு பொருட்கள் தரமற்றதாக உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதேபோல் குழந்தைகளுக்கு முறையாக சத்துமாவு வழங்காமல் அதனை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
முற்றுகை
இந்தநிலையில் புகார் குறித்து விசாரிக்க வட்டார உணவு பொருள் பாதுகாப்பு திட்ட அலுவலர் சித்ரா அங்கன்வாடி மையத்துக்கு வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் அங்கன்வாடி மையத்தை முற்றுகையிட்டு, குழந்தைகள் நலனில் அக்கறை காட்டாமல், தரமற்ற உணவு பொருட்களை சமைத்து வழங்கும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 5 குழந்தைகளுக்கு மட்டுமே உணவு வழங்கி விட்டு, 25 குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டதாக கணக்கு காட்டுவதாக கூறி கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் உணவு பொருள் பாதுகாப்பு திட்ட அலுவலர் சித்ராவை சத்துமாவு பதுக்கி வைக்கப்பட்ட இடத்துக்கு பொதுமக்கள் அழைத்து சென்றனர். இதையடுத்து அங்குள்ள ஒரு வீட்டில் 3 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்ட சத்துமாவு பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது பதுக்கலில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பொருள் பாதுகாப்பு திட்ட அலுவலர் சித்ரா தெரிவித்தார். பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.