அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை வாழ்க்கை நெருக்கடியால் கஷ்டத்தில் தள்ளப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியை கேரள அரசை போல ரூ.600 ஆக தமிழக அரசு உயர்த்தி அறிவிக்க கோரியும், விவசாய தொழிலாளர்களுக்கு தனித்துறை உருவாக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் கலையரசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கணேசன் சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட பொருளாளர் சேதுராமு, துணை தலைவர் அங்குதன், துணை செயலாளர் பெருமாள், மாவட்ட குழு உறுப்பினர்கள் வெங்கடேஷ், அருள்சாமி, முருகன், சகாய மாதா, ஜான்சி ராணி மற்றும் தாலுகா செயலாளர் அழகேந்திரன், பொருளாளர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.