மயானத்துக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு: பிணத்துடன் பொதுமக்கள் போராட்டம்


மயானத்துக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு: பிணத்துடன் பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 27 May 2023 12:15 AM IST (Updated: 27 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

உத்தனப்பள்ளி அருகே மயானத்துக்கு செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால், மூதாட்டியின் பிணத்தை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூதாட்டி சாவு

உத்தனப்பள்ளி அருகே உள்ள பீர்ஜேப்பள்ளி ஊராட்சி ராமபுரத்தை சேர்ந்தவர் சின்னதாயம்மா (வயது 65). இவர் நேற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து நேற்று அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சின்னதாயம்மாவுக்கு வீட்டில் இறுதி சடங்கு செய்தனர்.

பின்னர் அவருடைய உடலை அடக்கம் செய்ய மயானத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் வழக்கமாக மயானத்துக்கு செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டு, அதில் சிமெண்டு கற்கள் மூலம் மாட்டு கொட்டகை கட்டும் பணி நடந்தது. இதனை பார்த்து மூதாட்டியின்உறவினர்கள் அதிர்ச்சிஅடைந்தனர்.

சாலை மறியல்

மேலும் ஆத்திரமடைந்த அவர்கள் மூதாட்டியின் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் ஜெய்குமார், கிராம நிர்வாக அலுவலர் செந்தில், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி மற்றும் உத்தனப்பள்ளி போலீசார் அங்கு விரைந்துசென்றனர்.

அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உரிய முறையில் நிலத்தை அளவீடு செய்து, பாதை மீட்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். மேலும் அந்த பாதை வழியாக மூதாட்டியின் உடலை கொண்டு செல்ல நடவடிக்கைஎடுத்தனர்.

இதில் சமாதானமடைந்த உறவினர்கள் மூதாட்டியின் உடலை வழக்கமான பாதையில் மயானத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.


Next Story