மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ்பூஷண் சிங்குக்கு எதிராக டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மல்யுத்த வீராங்னைகளுக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி, திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் அஜித் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் பாலாஜி, நிர்வாகிகள் ஆனந்த், பொன்மதி, சண்முகம், மாணவர் சங்க மாநில துணை தலைவர் சம்சீர்அகமது, மாவட்ட தலைவர் முகேஷ், மாதர் சங்க மாநில செயலாளர் ராணி உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், பிரிஜ்பூஷண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.