சின்னசேலத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு


சின்னசேலத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ராமர் (வயது 60). வயது முதிர்வு, உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் நேற்று இவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக நயினார்பாளையம் செல்லும் சாலையில் சூர்யாநகர் அருகே உள்ள அருந்ததியர் சமூகத்தினருக்கான மயானத்தில் குழி தோண்டினர். இதுபற்றி அறிந்த தனிநபர்கள் சிலா் அங்கு வந்து தங்களது பட்டா நிலத்தில் குழி தோண்டியதாக கூறி பொக்லைன் எந்திரம் மூலம் அந்த குழியை மூடியதாக தெரிகிறது.

இந்த தகவல் அறிந்த ராமரின் உறவினர்கள் மற்றும் அருந்ததியர் சமூகத்தினர் அங்கு விரைந்து வந்து குழியை மூடியவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இதுபற்றி தகவல் அறிந்த சின்னசேலம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன், கிராம நிர்வாக அலுவலர் தர்மராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஒரு வாரத்திற்குள் நில அளவையர் மூலம் மயானத்தை அளந்து காட்டுவதாகவும், தற்போது இறந்தவரின் உடலை மாற்று இடத்தில் அடக்கம் செய்து கொள்ளுமாறும் தெரிவித்தனர். இதையேற்ற அருந்ததியர் சமூகத்தினர் ராமரின் உடலை வேறொரு இடத்தில் அடக்கம் செய்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story