குலசேகரம் பகுதியில் சேகரிக்கப்பட்டகுப்பையை பொன்மனை பேரூராட்சியில் கொட்ட எதிர்ப்பு


குலசேகரம் பகுதியில் சேகரிக்கப்பட்டகுப்பையை பொன்மனை பேரூராட்சியில் கொட்ட எதிர்ப்பு
x

குலசேகரம் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பையை பொன்மனை பேரூராட்சியில் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து வாகனம் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

குலசேகரம்,

குலசேகரம் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பையை பொன்மனை பேரூராட்சியில் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து வாகனம் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குப்பைகள் கொட்ட எதிர்ப்பு

குமரி மாவட்டத்தில் வணிக நகரங்களில் ஒன்றான குலசேகரம் பகுதிகளில் இருந்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தினமும் ஏராளமான குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த குப்பைகளை கொட்டுவதற்கு போதிய குப்பை கிடங்குகள் பேரூராட்சி பகுதியில் இல்லாமல் உள்ளது. இதனால் பிற பேரூராட்சி பகுதிகளில் கொண்டு சென்று அங்குள்ள உரக்கிடங்குகளில் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு அங்குள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

வாகனம் சிறைபிடிப்பு

இந்தநிலையில் குலசேகரத்தில் இருந்து நேற்று ஒரு மினிலாரியில் குப்பைகள் பொன்மனை பேரூராட்சி பகுதியில் புத்தன் அணைக்கு அருகில் உரம் தயாரிக்கும் உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை அறிந்த அங்குள்ள பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் குப்பை வாகனத்தை தடுத்து நிறுத்தி சிறை பிடித்தனர்.

இதையடுத்து அந்த இடத்திற்கு பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின், செயல் அலுவலர் ஜெயமாலினி மற்றும் குலசேகரம் பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ் மற்றும் செயல் அலுவலர் லிசி உள்ளிட்டோர் விரைந்தனர்.

பரபரப்பு

அப்போது பொன்மனை பேரூராட்சி பொதுமக்கள் தரப்பில், பொன்மனை பேரூராட்சியில் உள்ள உரக்கிடங்கில், குலசேகரம் பேரூராட்சியிலிருந்து வரும் குப்பைகளை கொட்டுவதால் அந்த இடத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியில் குடிநீர்த் திட்டங்களும் செயல்படுகின்றன. எனவே குலசேகரம் பேரூராட்சி குப்பைகளை இங்கு கொட்டக்கூடாது என்றனர். அப்போது குலசேகரம் பேரூராட்சி சார்பில், குப்பைகளை கொட்டுவதற்கு போதிய இடம் இல்லாத நிலையில், மாவட்ட நிர்வாகத்திடம் குப்பைகளை கொட்டுவதற்கு உகந்த இடத்தை கையகப்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்துள்ளோம். இதற்காக 3 மாதங்கள் வரை ஆகும் நிலையில், அதுவரை பொன்மனை பேரூராட்சி உரக்கிடங்கில் குப்பைகளை கொட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பொன்மனை பேரூராட்சி நிர்வாகத்தினர் குலசேகரம் பேரூராட்சி நிர்வாகத்தினரின் கோரிக்கை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து சிறை பிடிக்கப்பட்ட வாகனம் விடுவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story