கே.பி.ராமலிங்கம் கைதுக்கு எதிர்ப்பு: சேலம் அரசு ஆஸ்பத்திரியை பா.ஜனதாவினர் முற்றுகை
கே.பி.ராமலிங்கம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பா.ஜனதாவினர் முற்றுகையிட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கே.பி.ராமலிங்கம்
பா.ஜனதா மாநில துணைத்தலைவரும் முன்னாள் எம்.பி.யுமானவர் கே.பி.ராமலிங்கம். இவர், தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா சிலைக்கு மாலை அணிவிக்க பூட்டை உடைத்து நினைவிடத்துக்குள் சென்றார். இதுதொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் கே.பி.ராமலிங்கம் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கே.பி.ராமலிங்கம் உள்பட 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக போலீஸ் பாதுகாப்புடன் கே.பி.ராமலிங்கத்தை சேலம் அரசு ஆஸ்பத்திக்கு நேற்று இரவு 11 மணிக்கு அழைத்து வந்தனர்.
பா.ஜனதா போராட்டம்
கே.பி. ராமலிங்கத்திற்கு ரத்த அழுத்தம், இதய துடிப்பு, ஈ.சி.ஜி. உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தகவல் அறிந்த பா.ஜனதா மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கட்சியினர் ஆஸ்பத்திரியில் திரண்டனர். அவர்கள், கே.பி.ராமலிங்கம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது பா.ஜனதாவினர் ஆஸ்பத்திரிக்குள் செல்ல முயன்றனர். இதில் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பா.ஜனதாவினருடன் போலீஸ் உயர் அதிகாரிகள் பேசியதை தொடர்ந்து அங்கு அமைதி திரும்பியது. தொடர்ந்து கே.பி.ராமலிங்கத்துக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பா.ஜனதாவினர் ஆஸ்பத்திரி முன்பு திரண்டு இருந்ததால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.