போக்குவரத்து தொழிலாளர் சம்மேளம் சார்பில் வாகனங்களை நிறுத்தும் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர் சம்மேளம் சார்பில் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம், அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், ஆட்டோ தொழிலாளர் சம்மேளம் ஆகியவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் தழுவிய பிரசார இயக்கத்தின் மூலம் இன்று மதியம் 12 மணி முதல் 12.15 வரை அனைத்து வாகனங்களையும் 15 நிமிடங்கள் நிறுத்தும் போராட்டம் திருவண்ணாமலை ரவுண்டானா அருகில் நடைபெற்றது.
முன்னதாக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாகிகள் நாகராஜன், முரளி, சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் 3 சம்மேளனத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.
மத்திய, மாநில அரசுகள் அதீதமான தண்டனை, ஆன்லைன் அபராதம் போன்றவற்றை கைவிட வேண்டும்.
புதிய வாகனங்களுக்கு வாங்க அரசு மானியம் வழங்குவதுடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் ஏற்பாடு செய்ய வேண்டும். தொழிலை முறைப்படுத்த ஆட்டோ, டாக்சி கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.
மக்களுக்கு எதிராக உள்ள மோட்டார் வாகன சட்டத்தை திருத்த வேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு, டோல்கேட் கட்டணம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் சிறிது நேரம் ரவுண்டானா அருகில் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.