மத்திய அரசை கண்டித்து மறியல்


மத்திய அரசை கண்டித்து மறியல்
x
தினத்தந்தி 30 Aug 2022 7:35 PM IST (Updated: 30 Aug 2022 7:36 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல், பழனியில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் ஈடுபட்ட 186 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

அரிசி, பால் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். இதேபோல் மருந்து பொருட்கள் மீதான வரியை வாபஸ் பெற வேண்டும். மேலும் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடந்தது.

இதையொட்டி திண்டுக்கல்லில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானம் தலைமையில், மாவட்ட செயலாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள், கட்சியினர் ஏராளமானோர் ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலத்தின் இறுதியில் திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் அமர்ந்து கொண்டு மத்திய அரசை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட நிர்வாகிகள் உள்பட 124 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பழனியில் மறியலில் ஈடுபட்டனர். இதற்கு பழனி நகர செயலாளர் கவுசல்யா தலைமை தாங்கினார். தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் சிவராஜ் முன்னிலை வகித்தார். முன்னதாக பழனி தபால் அலுவலகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்பிறகு பழனியில், தாராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியல் செய்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 62 பேரை பழனி டவுன் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.



Next Story