கலெக்டர் அலுவலகம் முன் பா.ஜ.க.வினர் போராட்டம்


கலெக்டர் அலுவலகம் முன் பா.ஜ.க.வினர் போராட்டம்
x

கலெக்டர் அலுவலகம் முன் பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.

திருச்சி

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் கிரிவலப் பாதை அருகே புதிதாக அசைவ உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்திற்கு ஆரம்ப நிலையிலேயே பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இதுதொடர்பாக மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ச்சியாக மனு அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அந்த உணவகத்தை அகற்ற வலியுறுத்தி கலெக்டர்அலுவலகம் முன் பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். இதற்காக திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜசேகரன் தலைமையில் ஊடகப்பிரிவு தலைவர் இந்திரன் மற்றும் மண்டல நிர்வாகிகள், மகளிர் அணியினர் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர். ஆனால் உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். மேலும் போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வினர் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், போலீசாரை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று, அந்த உணவகத்தை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story