சாலை தடுப்பு சுவரை உடைத்து போராட்டம்:பா.ஜனதா பிரமுகர் அதிரடி கைது
தூத்துக்குடியில் சாலை தடுப்பு சுவரை உடைத்து போராட்டம் நடத்திய பா.ஜனதா பிரமுகர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் சாலை தடுப்பு சுவரை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா பிரமுகர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
போராட்டம்
தூத்துக்குடி அண்ணாநகர் மெயின் ரோட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் நடுவில் தடுப்புசுவர் கட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் டூவிபுரம் 1-வது தெருவில் இருந்து அண்ணா நகர் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வழியில்லாமல் தடுப்பு சுவர் மீது ஏறி சென்று வந்தனர். இதனால் அந்த பகுதியில் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரை உடைத்து போராட்டம் நடத்தப்போவதாக பா.ஜனதா மேற்கு மண்டல அரசு தொடர்பு பிரிவு துணைத் தலைவர் ஆர்.காசிலிங்கம் அறிவித்தார். அதன்படி அதன்படி நேற்று முன்தினம் காசிலிங்கம் மற்றும் அவரது ஆதரவாளர் பெருமாள் ஆகிய 2 பேரும் கடப்பாறை மற்றும் சம்மட்டியால் சாலை தடுப்பு சுவரை உடைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையர் எஸ்.சேகர் மற்றும் ஊழியர்கள் அங்கு வந்து அவர்களை தடுத்து எச்சரித்து அனுப்பினர்.
கைது
மேலும், இது தொடர்பாக உதவி ஆணையர் சேகர் தூத்துக்குடி மத்திய பாகம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் காசிலிங்கம் மற்றும் பெருமாள் ஆகிய 2 பேர் மீதும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலை மிரட்டல், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து பா.ஜனதா நிர்வாகி காசிலிங்கத்தை மத்தியபாகம் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.