முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்து மக்கள் கட்சியினர் தபால் அனுப்பும் போராட்டம்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்து மக்கள் கட்சியினர் தபால் அனுப்பும் போராட்டம்
x
தினத்தந்தி 13 May 2023 1:00 AM IST (Updated: 13 May 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்து மக்கள் கட்சியினர் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

கோரிக்கை மனு

இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தபால் அனுப்பும் போராட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது.

இந்த போராட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணை தலைவர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். அதையடுத்து இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை மனுக்களுடன் ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தபால் பெட்டியில் கோரிக்கை மனுக்களை போட்டனர். அந்த மனுக்களில் 30 ஆண்டுகளாக இடஒதுக்கீடு கேட்டு போராடிவரும் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும், தமிழகத்தில் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை மீண்டும் திரையிட வேண்டும். சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது போல் தமிழர்களின் வீரத்தை உலகெங்கும் எடுத்துரைத்த ராஜராஜ சோழனுக்கு 133 அடி சிலையை நிறுவ வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பழனி

இதேபோல் பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சரவணக்குமார் தலைமையில் அக்கட்சியினர் நேற்று திரண்டு வந்தனர். பின்னர் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில், தமிகத்தில் ஏற்கனவே நீர்நிலைகள் அழிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீர்நிலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவை அரசு கொண்டு வந்துள்ளது. எனவே நீர்நிலைகள், இயற்கை வளங்களை பாதுகாக்க இந்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும். இல்லையேல் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.


Next Story