வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்


வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
x
தினத்தந்தி 11 July 2023 12:15 AM IST (Updated: 11 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலில் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்துவோம் என மற்றொரு தரப்பினர் அறிவித்துள்ளனர்

விழுப்புரம்

விழுப்புரம்

கோவில் பூட்டி சீல்வைப்பு

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா, திரவுபதியம்மன் கோவிலில் வழிபாடு நடத்த ஒரு தரப்பினருக்கு மற்றொரு தரப்பினர் அனுமதி மறுத்தனர். இப்பிரச்சினை தொடர்பாக 8 கட்டங்களாக இரு தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தியும் இரு தரப்பினருக்கும் இடையே எந்தவித சுமூகமான உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாத்திடும் வகையில் அந்த கோவில், கடந்த ஜூன் மாதம் 7-ந் தேதி பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதையடுத்து இக்கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரையும் கடந்த மாதம் 9-ந் தேதி, விழுப்புரம் கோட்டாட்சியர் வரவழைத்து விசாரணை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக 2-ம் கட்ட விசாரணை கடந்த 7-ந் தேதி நடந்தது. அப்போது ஒரு தரப்பை சேர்ந்த (அ பிரிவினர்) 5 பேர், கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள், கோவிலை பூட்டி சீல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி எங்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வரும் வரை எங்கள் தரப்பு ஆட்சேபனையை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்தனர்.

மற்றொரு தரப்பினரிடம் விசாரணை

இதைத்தொடர்ந்து 2-ம் கட்ட விசாரணைக்காக மற்றொரு தரப்பினர் (ஆ பிரிவினர்) நேற்று காலை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர். அதன்படி அத்தரப்பை சேர்ந்த 5 பேர், தங்கள் தரப்பு வக்கீலுடன் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி, தற்போதைய நிலைப்பாடு குறித்து கேட்டறிந்து விசாரணை நடத்தினார். கோட்டாட்சியருடன் விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன், வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது தங்கள் தரப்பின் நிலைப்பாடு குறித்து முதல்கட்ட விசாரணையின்போதே எழுத்துப்பூர்வமாகவும், உரிய ஆவணங்களை சமர்பித்தும் தெரிவித்து விட்டோம். தற்போது சொல்வதற்கு எதுவும் இல்லை. எங்கள் தரப்பினரை கோவிலுக்குள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டுமென முறையிட்டனர்.

கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

பின்னர் விசாரணை முடிந்து அவர்கள் வெளியே வந்தனர். அப்போது இவர்களின் வக்கீல் தமிழ்மாறன், நிருபர்களிடம் கூறும்போது வருகிற ஆகஸ்டு 1-ந் தேதிக்குள் மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலுக்குள் வழிபாடு நடத்த எங்களை அழைத்து செல்லவில்லை என்றால் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் எங்கள் பகுதியில் வசிக்கும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்துவோம். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந் தேதி அன்று இந்து மதத்தில் இருந்து வெளியேறுவோம் என்றார்.

இதுகுறித்து கோட்டாட்சியர் பிரவீனாகுமாரியிடம் கேட்டபோது, மேல்பாதி கோவில் பிரச்சினை தொடர்பாக முதல்கட்ட விசாரணை முடிந்துள்ள நிலையில் தற்போது 2-ம் கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. மாவட்ட கலெக்டரின் ஆலோசனையின்பேரில் நான், இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரம், மேல்பாதி கிராமத்திற்கு நேரில் சென்று இருதரப்பு மக்களிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நீண்ட கால கோரிக்கைகள் சிலவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் கோவில் வழிபாடு பிரச்சினையையும் சுமூகமாக தீர்க்க வழிவகை செய்யப்படும் என்றார்.


Next Story