ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தேரடி திடலில் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டம் தொடர வேண்டும், ஓய்வூதியர்களுக்கு 70 வயதில் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், மூத்த குடிமக்கள் ரெயில் பயண சலுகை கட்டணம் மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் முத்தானந்தம் தேவதாஸ் தலைமை தாங்கினார். செயலாளர் சொக்கையா வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ராமர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கோரிக்கை குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கருப்பையா, கோமதி சங்கர், மனோரஞ்சிதம், சாந்தி மிக்கேல் உள்பட சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொருளாளர் பழனிகுமார் நன்றி கூறினார்.