பகுதி நேர ரேஷன் கடை திறக்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம்
பகுதி நேர ரேஷன் கடை திறக்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
தோகைமலை ஒன்றியம், கழுகூரில் புதிதாக தொடங்கப்பட்ட பகுதி நேர ரேஷன் கடையை திறக்கக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கழுகூர் பஸ் நிலையத்தில் இருந்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர், அ.உடையாப்பட்டி பொதுமக்களுடன் ஊர்வலமாக கழுகூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு வந்தனர். பின்னர் வங்கி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் ஒன்றிய துணைத் தலைவர் ரத்தினம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் முனியப்பன் முன்னிலை வைத்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விவசாய சங்கம் மாவட்ட செயலாளர் சக்திவேல் கலந்து கொண்டு பேசினார்.இதுகுறித்து தகவல் அறிந்த கழுகூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அதிகாரிகள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மனுவை பெற்றுக் கொண்டனர். மேலும் 10 நாட்களுக்குள் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கத்தினர் கூறி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.