மீன்பிடி துறைமுக தடுப்புச்சுவரை தரமாக சீரமைக்காவிட்டால் போராட்டம்


மீன்பிடி துறைமுக தடுப்புச்சுவரை தரமாக சீரமைக்காவிட்டால் போராட்டம்
x

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக தடுப்புச் சுவரை தரமாக சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனகுறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் தெரிவித்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக தடுப்புச் சுவரை தரமாக சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனகுறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் தெரிவித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

குமரி மாவட்ட மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக், மீன்வளத்துறை துணை இயக்குனர் காசிநாத பாண்டியன், உதவி இயக்குனர் விர்ஜில் கிராஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மீனவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில் மீனவர்கள் கூறியதாவது:-

உள்நாட்டு மீனவர்களுக்கு தனி அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் மீன் பாசி குத்தகை உரிமையை கோர்ட்டு உத்தரவுபடி காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்கரை மேலாண்மை சட்டம் குறித்து ஆன்லைன் மூலமாக கருத்து தெரிவிக்க கூறியுள்ளார்கள். ஆன்லைன் மூலமாக கருத்து கேட்பது நியாயமானதாக இருக்காது. அதிலும் ஆன்லைன் கருத்து கேட்பில் பவளப்பாறை, ஆமை முட்டையிடும் இடம் என பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளனர். உள்ளூர் மக்களுக்கு பிரச்சினை இருந்தால் சிறப்பு சலுகை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர். மீனவர்களாகிய நாங்கள் எங்களுடைய உரிமையை தான் கேட்கிறோம், சலுகையை கேட்கவில்லை.

போராட்டம்

எனவே, கடற்கரை மேலாண்மை சட்டம் குறித்து நேரடியாக மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் சேதமடைந்த தடுப்புச் சுவர்களை தரமான முறையில் சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நேரடியாக கூட்டம் நடத்தப்படும்

மீனவர்கள் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து அதிகாரிகள் பேசியதாவது:-

மீன் பாசி குத்தகை உரிமம் வழங்குவது தொடர்பாக கோர்ட்டில் என்ன தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதோ அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடற்கரை மேலாண்மை சட்டம் குறித்து ஆன்லைனில் 45 நாட்கள் கருத்து கேட்பது என்பது வழக்கமான ஒன்றுதான். அதன் அடிப்படையில் கடந்த 16-ந் தேதி முதல் ஆகஸ்ட் 4-ந் தேதி வரை ஆன்லைனில் கருத்து கேட்கப்படும். இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் நேரடியாக கருத்து கேட்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். அதில் மீனவர்கள் தங்களது பிரச்சனைகளை தெரிவித்தால் அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

15 பேர் கொண்ட குழு

தேங்காப்பட்டினம் துறைமுகம் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே தனியாக கூட்டம் நடத்தப்பட்டு இருந்தது. அங்கு சிறிய கற்கள் போடுவதற்கு பதிலாக பெரிய கற்கள் போட வேண்டும். கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள 15 மீனவ கிராமங்களை சேர்ந்த ஒவ்வொருவரை தேர்வு செய்து 15 பேர் கொண்ட குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள் துறைமுகத்தில் போடப்பட்ட 210 மீட்டர் அலை தடுப்புச்சுவரை ஆய்வு செய்துள்ளனர். வாரம் ஒரு முறை 15 கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் சென்று அந்த பணி நடைபெறுவதை ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூட்டத்தில் மீனவ பிரதிநிதிகள் குறும்பனை பெர்லின், விமல்ராஜ், ஜெயசுந்தரம், அலெக்சாண்டர், மரிய ஜார்ஜ், எனல்ராஜ், ஜான் அலோசியஸ், அருட்பணியாளர் கில்டஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story