நிலத்தை பள்ளியின் விரிவாக்க பணிக்கு வழங்கா விட்டால் போராட்டம்: சமூக வலைதளங்களில் வெளியான தகவலால் பரபரப்பு
குளித்தலை அருகே கோட்டமேடு பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை பள்ளியின் விரிவாக்க பணிக்கு வழங்கா விட்டால் போராட்டம் நடத்தப்படும் என சமூக வலைதளங்களில் வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரசு புறம்போக்கு நிலம்
கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம் வைகநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியின் அருகில் உள்ள அரசு புறம்போக்கு மற்றும் திருச்சி ஜில்லா போர்ட் நிலத்தினை 2012-ல் இருந்த குளித்தலை வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவின் அடிப்படையில் அந்த நிலத்தை கோட்டமேடு ஆதிதிராவிடர் பள்ளியின் விரிவாக்கத்திற்கு ஒப்படைக்க வேண்டும்.
போராட்டம் நடத்தப்படும்
இந்த நிலப் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் குளித்தலை வட்டாட்சியரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் குளித்தலை பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.நிலத்தை பள்ளிக்கு வழங்காத பட்சத்தில் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த உள்ளதாக இக்கட்சியினர் சமூக வலைதளங்களில் தகவல் வெளியிட்டு உள்ளனர். இந்த சுவரட்டியால் குளித்தலை பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.