அமலிநகரில் போராட்டம்: மீனவ பிரதிநிதிகளிடம் கலெக்டர் பேச்சுவார்த்தை
திருச்செந்தூர் அமலிநகரில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மீனவ பிரதிநிதிகளிடம் கலெக்டர் செந்தில்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
திருச்செந்தூர் அமலிநகரில் 226 மீன்பிடி பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.
தூண்டில் வளைவு
இந்த பகுதி மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அமலிநகரில் ரூ.58 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அரசு அறிவித்தது. ஆனால், ஓராண்டு கடந்தும் இதுவரை தூண்டில் வளைவு அமைக்கப்படவில்லை எனக் கூறி அமலிநகர் மீனவர்கள் கடந்த 7-ந் தேதி முதல் கடலுக்கு செல்லாமல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்கள் போராட்டம் தொடங்கிய மறுநாளே மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால், மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு செல்ல மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு காரணமாகவே தூண்டில் வளைவு அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. தூண்டில் வளைவு அமைப்பதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே அமலிநகரில் தூண்டில் வளைவு நிச்சயம் அமைக்கப்படும். இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க தயார் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் விளக்கம் அளித்தார்.
ஆனாலும் இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் உறுதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அமலிநகர் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிர போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமலிநகர் மீனவர்களுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மீண்டும் அழைப்பு விடுத்தார்.
பேச்சுவார்த்தை
இதனை ஏற்று அமலிநகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம், ஊர்நல கமிட்டி தலைவர் பாஸ்கர், பொருளாளர் குளோரியான், நிர்வாகிகள் கெருடஸ், பெலிக்ஸ் ஆகிய 5 மீனவ பிரதிநிதிகள் மட்டும் நேற்று பேச்சுவார்த்தைக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களுடன் கலெக்டர் செந்தில் ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன், தாசில்தார் வாமணன், துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர், உதவி இயக்குனர் விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது மீனவ பிரதிநிதிகளிடம், தூண்டில் வளைவு அமைப்பதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே, அமலிநகரில் தூண்டில் வளைவு மிக விரைவில் நிச்சயம் அமைக்கப்படும்.
இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது என எடுத்துக்கூறினார். அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மீனவர்களிடம் விளக்க வேண்டும் என்று மீனவ பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதற்கு கலெக்டர், மீனவர்களை கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்கிறோம். அவர்களிடம் விளக்கமாக தெரிவிக்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மீனவர்களை அழைத்து வருவதாக கூறிவிட்டு மீனவ பிரதிநிதிகள் புறப்பட்டு சென்று விட்டனர். ஆனால் மாலை வரை அவர்கள் வரவில்லை. இதனால் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை.
ஆயர் பேச்சுவார்த்தை
இதற்கிடையே தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் நேற்று இரவு அமலிநகர் வந்து, சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்திய மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பங்குதந்தை அலுவலகத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல் சேவியர், திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன் , தாசில்தார் வாமணன், போலீஸ் துணை சூப்பிரண்டு வசந்த்ராஜ், அமலிநகர் பங்குதந்தை வில்லியம் சந்தானம், கல்லாமொழி பங்குதந்தை பென்சிகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆயர் ஸ்டீபன் கூறுகையில், உங்களது கோரிக்கை நியாயமானது. அதே நேரத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. போராட்டத்தை தொடருங்கள். ஆனால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுங்கள் என்றார். இதனை ஏற்ற மீனவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். அதே நேரத்தில் போராட்டத்தை தொடருவதாக தெரிவித்தனர்.